“வெற்றி என்று அறிவித்துவிட்டு சிறிது நேரத்தில் தோல்வி என்று அறிவித்த தேர்தல் அதிகாரிகள்” – தேஜஸ்வி குற்றச்சாட்டு

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் முதல் முறையாக நடக்கும் சட்டப்பேரவை தேர்தலான பீகாரில் நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் பெரும் குளறுபடிகள் நடந்தன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 12 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இதில், பாஜ முன்னிலை பெற்றாலும், பாஜவுக்கும் ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணிக்கும் இடையே வெறும் 10 தொகுதிகள் மட்டுமே வெற்றி வித்தியாசம் உள்ளது. எனவே இதில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி பரபரப்பு குற்றம் சாட்டினார். அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது: குறைந்தபட்சம் 10 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை தேர்தல் அதிகாரிகள்  வேண்டுமென்றே தாமதப்படுத்தினர். எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றும் கூட சான்றிதழ் வழங்காமல் தாமதித்தனர்.

முதல்வர் நிதிஷ்குமாரும், துணை முதல்வர் சுஷில் குமார் மோடியும் தேர்தல் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து, வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்த தொகுதிகளில் தேர்தல் முடிவை அறிவிப்பதில் தாமதப்படுத்தினர். முதலில் 119 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வேட்பாளர்கள் வென்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான பட்டியலையும் அதன் இணையதளத்தில் வெளியிட்டது. தேர்தல் அதிகாரிகள் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்தனர். ஆனால், அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் தோற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதுபோன்ற ஊழல்கள் ஜனநாயகத்தில் என்றும் வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே மின்னணு இயந்திரத்தில் முறைகேடு செய்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின. இதனை தேர்தல் ஆணையம் மறுத்து விளக்கமளித்தது. அதைத் தொடர்ந்து தேஜஸ்வியும் வாக்கு எண்ணிக்கை குறித்து குற்றம்சாட்டி உள்ளார். மேலும், இது தொடர்பாக ஆர்ஜேடி சார்பில் தேர்தல் ஆணையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x