டெல்லி கலவரத்தில் நடந்தது என்ன? உண்மை கண்டறியும் குழு பரபரப்பு அறிக்கை..!

டெல்லியில் ஐந்து மாதங்களுக்கு முன்னர், சிறுபான்மையினரை குறிவைத்து பயங்கரமான கலவரம் வெடித்தது. இதில், 55 பேர் கொல்லப்பட்டனர். வழிபாட்டுத்தலங்கள், வணிக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்நிலையில், டெல்லி சிறுபான்மை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கலவரத்துக்கு காரணமாக இருந்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கபில் மிஸ்ராவை முன்கூட்டியே கைது செய்திருந்தால் கொடூரமான வன்முறையைத் தவிர்த்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எம்.ஆர்.ஷம்ஷாத் தலைமையிலான, 10 பேர் கொண்ட, உண்மை கண்டறியும் குழு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

“ பிப்ரவரி 23ஆம் தேதி டெல்லி மௌஜ்பூரில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கபில் மிஸ்ராவின் வெறுப்பு பேச்சை தொடர்ந்தே, வெவ்வேறு பகுதிகளில் கலவரம் தொடங்கியது.

சிஏஏ எதிர்ப்பாளர்களை பகிரங்கமாக கேவலப்படுத்தி, பாஜக தலைவர்கள், பல உரைகள் நிகழ்த்திக்கொண்டே வந்தனர். அந்த பேச்சுகள், வெளிப்படையான மதவாத வன்முறை மிரட்டல் நிறைந்து காணப்பட்டன. ஷாஹீன்பாக் ஆர்ப்பாட்டங்கள் பற்றி அவதூறுகள் கூறப்பட்டு தவறாக சித்தரித்து சொல்லப்பட்டது.

‘டெல்லி ஜாபராபாத்தில் உள்ள சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்களை வலுக்கட்டாயமாக அகற்ற வேண்டும்; இல்லாவிட்டால், நாங்களே சட்டத்தை கையில் எடுப்போம்’ என்று கபில் மிஸ்ரா வெளிப்படையாக பேசினார். சட்டத்திற்கு புறம்பான திட்டங்களை பற்றி பேசினார்.

பாஜக தலைவர் இத்தகைய வன்முறையை தூண்டும் பேச்சை பேசியபோது, வடகிழக்கு டெல்லி போலீஸ் துணை ஆணையர் வேத் பிரகாஷ், மிஸ்ராவுக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். இந்த கட்டத்தில், கபில் மிஸ்ராவைக் கைது செய்ய காவல்துறையினர் தவறிவிட்டனர்.

கபில் மிஸ்ரா கும்பலால், தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள், முஸ்லீம் மக்களை இலக்காகக் கொண்டிருந்தன. அவரது பேச்சைக் கேட்டு கலவரம் செய்த யாரையும் போலீஸ் தடுக்கவில்லை. உயிர்கள் கொல்லப்படும்போதும், சொத்துகள் தீக்கிரையாக்கப்படும்போதும், போலீசார் வெறுமனே வேடிக்கை பார்த்தார்கள். இது கலவரக்காரர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.

அதுமட்டுமின்றி, சில இடங்களில், கலவரக்காரர்கள், கலவரத்தை முடித்த பிறகு, போலீஸ் மற்றும் ராணுவத்தால், பத்திரமாக அழைத்து சென்று விடப்பட்டனர்.

டெல்லி காவல்துறை பல தருணங்களில் வேண்டுமென்றே செயலற்று கிடந்தது. புகார்களில் தீவிர தன்மை இருந்தபோதிலும், தாக்கல் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ”

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள டெல்லி காவல்துறை செய்தித்தொடர்பாளர் அனில் மிட்டல், நாங்கள் இன்னும் அறிக்கையை படிக்கவில்லை. நிச்சயம் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருப்பின் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.

இதனிடையே, இந்த அறிக்கை உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக, டெல்லி பாஜக எம்.பி மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x