ஓரின சேர்க்கைக்கு மறுத்த முதியவரை கொலை செய்த வாலிபர் கைது!!

தேவதானப்பட்டி அருகே ஓரின சேர்க்கைக்கு மறுத்த முதியவரை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்ராம் (வயது 70). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருடைய மகள் மாரியம்மாள் அதே ஊரில் பக்கத்து தெருவில் வசித்து வந்தார்.
கடந்த 16-ந்தேதி மாரியம்மாள், பொன்ராமின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் இறந்து கிடந்தார். அவருடைய கழுத்து பகுதியில் காயங்கள் இருந்தன. இதனால் மாரியம்மாள் சந்தேகம் அடைந்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில், தனது தந்தை சாவில் மர்மம் இருப்பதாக புகார் செய்தார். அதன்பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்ராமின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த ஒரு வாரமாக பொன்ராம் வீட்டிற்கு சென்று வந்தவர்கள் குறித்து விசாரணை செய்தனர். இதைத்தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த அருண்பாண்டியன் (20) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். அதையொட்டி அவரிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை செய்தனர். இதில் வெளியான தகவல் வருமாறு:-
சம்பவத்தன்று அருண்பாண்டியன் பொன்ராமின் வீட்டிற்கு சென்று அவரை ஓரின சேர்க்கையில் ஈடுபடுமாறு வற்புறுத்தி உள்ளார். இதற்கு பொன்ராம் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். மேலும் வெளியில் கூறி அசிங்கப்படுத்தி விடுவேன் என்று கூறி தகராறு செய்தார். இதனால் அருண்பாண்டியன் ஆத்திரம் அடைந்து பொன்ராமின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அருண்பாண்டியனை கைது செய்தனர்.
இதனிடையே கொலை நடந்த இடத்தை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.