மூதாட்டியிடம் 13 ஏக்கர் நிலம் மோசடி: உறவினர் கைது

முதியோர் காப்பீடு திட்டத்தில் சேர்ப்பதாக கூறி மூதாட்டியிடம் 13 ஏக்கர் நிலம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் சுந்தர்ராஜன் என்பவரை கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள தொடர்ந்தனூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மனைவி பொன்னம்மாள் (வயது 85). இவருக்கு பானாம்பட்டு பகுதியில் சொந்தமாக 13 ஏக்கர் நிலம் உள்ளது.
அதே பகுதியை சேர்ந்த பொன்னம்மாளின் உறவினரான சுந்தர்ராஜன் (40) என்பவர் பொன்னம்மாளின் வீட்டுக்கு சென்றார். அவரை அரசு அறிவித்துள்ள முதியோர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதாக கூறினார். பின்னர் அவரை தன்னுடன் அதற்குரிய அரசு அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தார். இதை நம்பிய பொன்னம்மாள், சுந்தர்ராஜனுடன் சென்றார்.
விழுப்புரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு பொன்னம்மாளை அழைத்து சென்று அவருக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தை சுந்தர்ராஜன் தனது பெயருக்கு எழுதி வாங்கி கொண்டார். சிலநாட்களுக்கு பிறகு தனது நிலத்தை மோசடியாக சுந்தர்ராஜன் எழுதி வாங்கி கொண்டதை அறிந்த பொன்னம்மாள் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் சுந்தர்ராஜனிடம் சென்று தனது நிலத்தை திருப்பி தருமாறு கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த அவர் பொன்னம்மாளுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட குற்றபிரிவு போலீசில் பொன்னம்மாள் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சுந்தர்ராஜனை கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.