ஓராண்டுக்கு பின் பள்ளிக்கு திரும்பிய கிரெட்டா தன்பெர்க்..!

பருவநிலை மாற்றம் குறித்த பிரசாரம் மூலம் கவனம் ஈர்த்த ஸ்வீடனை சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரெட்டா தன்பெர்க், ஓராண்டுக்கு பின் மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளார்.
பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஸ்வீடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய 17 வயதாகும் கிரெட்டா தன்பெர்க், கடந்தாண்டு உலகம் முழுவதும் பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டார்.
‘பள்ளியிலிருந்து என் இடைவெளி ஓராண்டு முடிந்துவிட்டது. இறுதியாக மீண்டும் பள்ளிக்கு வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என பள்ளி பையுடன், சைக்கிளில் அமர்ந்தப்படி புன்னகைக்கும் புகைப்படம் ஒன்றை கிரெட்டா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் எந்த நகரத்தில் உள்ள பள்ளியில் படிப்பை தொடர்கிறேன் என அவர் குறிப்பிடவில்லை.
கடந்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்து , கிரெட்டா பருவ நிலை மாற்றம் குறித்து பிரசாரம் செய்ய உலகெங்கிலும் பயணம் செய்ததால், அவர் தொலைதூர முறையில் பாடங்களை படித்து வந்தார். விமான பயணங்கள் கார்பன் உமிழ்வை அதிகப்படுத்துவதாக கூறிய கிரெட்டா, அட்லாண்டிக் கடலில் படகில் பயணம் செய்தார் .
சிலி தலைநகர் சாண்டிகோவில் நடைபெறுவதாக இருந்த ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பங்கேற்க திட்டமிடிந்தார். ஆனால் சிலியில் ஏற்பட்ட பெரும் அமைதியின்மை காரணமாக இந்த நிகழ்வு இறுதியில் மாட்ரிட் நகருக்கு மாற்றப்பட்டது. ஐ.நா. சபையில் பருவநிலை உச்சி மாநாட்டில், உலகத் தலைவர்களை நோக்கி ‘உங்களுக்கு எவ்வளவு தைரியம்’ என வினவியது பலரது கவனத்தை ஈர்த்தது.