“மத்திய பாஜக அரசால் தப்ளிக் ஜமாஅத் அமைப்பினர் பலிகடா ஆக்கப்பட்டு உள்ளனர்…” கண்டித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள்!!

இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பிரச்சினைக்கு,  மத்திய அரசால், தப்லீக் ஜமாத்தினர் பலிகடாக்களாக ஆக்கப்பட்டனர் என்று கூறி, அவர்கள் மீதான அத்தனை வழக்குகளையும் தள்ளுபடி செய்தது மும்பை உயர் நீதிமன்றம்.

தொற்றுநோய்கள் சட்டம், மகாராஷ்டிரா போலீஸ் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் வெளிநாட்டவர் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு விதிகளின் கீழ், மொத்தம் 29 வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மேலும் அவர்கள் தங்குவதற்கு இடம் வழங்கியதற்காக, ஆறு இந்தியர்கள் மற்றும் மஸ்ஜித்களின் அறங்காவலர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஐவரி கோஸ்ட், கானா, தான்சானியா, ஜிபூட்டி, பெனின் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த மனுதாரர்கள் தாக்கல் செய்த மூன்று தனித்தனி மனுக்களை நீதிபதி டி.வி.நலாவடே மற்றும் நீதிபதி எம்.ஜி.செவ்லிகர் சேர்ந்த அமர்வு விசாரித்தனர்.

மனுதாரர்கள் கூறுகையில், “நாங்கள் இந்திய அரசு முறையாக  வழங்கிய விசாவில் தான் இந்தியா நாட்டின்  கலாச்சாரம், பாரம்பரியம், விருந்தோம்பல் மற்றும் இந்திய உணவை அனுபவிக்க வந்தோம். நாங்கள் விமான நிலையத்திற்கு வந்ததும், கோவிட் -19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவை நெகட்டிவ் என்று கண்டறியப்பட்ட பின்புதான் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டோம்” என்று கூறியுள்ளனர்.

மேலும், “அகமதுநகர் மாவட்டத்திற்கு வருவது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு நாங்கள் தகவல் தெரிவித்திருந்தோம். மார்ச் 23 முதல் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, வாகன நடமாட்டம் நிறுத்தப்பட்டு, ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜ்கள் மூடப்பட்டன. இதன் விளைவாக தான் மஸ்ஜித் எங்களுக்கு தங்குமிடம் கொடுத்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறுவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடவில்லை” என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.

இதற்கு அகமதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அளித்த பதில் மனுவில், “மனுதாரர்கள் இஸ்லாம் மதத்தைப் பற்றி பிரச்சாரம் செய்வதற்காக அந்த இடங்களுக்கு வருகை தந்ததாகவும், எனவே அவர்கள் மீது குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர். மூன்று வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட ஐந்து வெளிநாட்டினர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்தபின்னர், மனுதாரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்” என்று தெரிவித்தார்.

மாவட்ட நீதிபதி தடை உத்தரவுகளை பிறப்பித்ததும், அனைத்து பொது இடங்களையும் மூட உத்தரவிடப்பட்டதாக கூறியுள்ள டி.எஸ்.பி. தடை உத்தரவுகள் மற்றும் விசாவின் நிபந்தனைகள் இருந்தபோதிலும், மனுதாரர்கள் தப்லீக் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட நபர்களை கொரோனா தொற்று பரிசோதனை தொடர்பாக பரிசோதிக்க முன்வருமாறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டும் அவர்கள் தானாக முன்வராததோடு. கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தலையும் உருவாக்கினர். இதன் காரணமாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மனுதாரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நலாவடே பின்பு தீர்ப்பை வாசித்தார். அதில், “மனுவில் கூறியுள்ளபடி, அண்மையில் புதுப்பிக்கப்பட்ட விசா கையேட்டின் கீழ் கூட, வெளிநாட்டவர்கள் மத இடங்களுக்கு வருவதற்கு, மத சொற்பொழிவுகளில் கலந்துகொள்வது போன்ற சாதாரண மத நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கும் எந்த தடையும் இல்லை என்பதைக் காட்டுகிறது.

தப்லீக் ஜமாமத் இஸ்லாமியத்தின் ஒரு தனி பிரிவு அல்ல, அது மதத்தை சீர்திருத்துவதற்கான இயக்கம் மட்டுமே. சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சீர்திருத்தம் எப்போதும் அவசியம் என்பதால் சீர்திருத்தத்தின் காரணமாக ஒவ்வொரு மதமும் பல ஆண்டுகளாக உருவாகியுள்ளது. மேலும், வளர்ந்து வரும் உலகில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டினர் இஸ்லாம் மார்க்கத்தை பிரச்சாரம் செய்வதன் மூலம் மற்ற மதத்தினரை முஸ்லீமாக மாற்றுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வழக்கில் வெளிநாட்டவர் மீதான  குற்றச்சாட்டுகள் அனைத்தும் தெளிவற்றவையாகவும், சாத்தியமில்லாதவையாகவும் உள்ளது.

டெல்லிக்கு வந்த வெளிநாட்டினருக்கு எதிராக ஊடகங்களில் பெரிய பிரச்சாரம் செய்யப்பட்டு, இந்தியாவில் கொரோனா தொற்று பரவுவதற்கு இந்த வெளிநாட்டினர் தான் காரணம் என்று ஒரு பிம்பம் உருவாக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் கொரோனா போன்ற தொற்றுநோய் அல்லது பெரிய பிரச்சனை நிகழும்போது ஒரு பலிகடாவை தேடுகிறது.  தற்போதைய கொரோனா பிரச்சனையில் வெளிநாட்டினரை பலிகடாக்க முயற்சித்ததற்கான அதிக  சாத்தியக்கூறுகள் உள்ளது என்பதைக் காட்டுகின்றன. எனவே மனுதாரர்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது. வெளிநாட்டவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை குறித்து ஆராயவும், அத்தகைய நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்பீட்டை சரி செய்ய வேண்டும்.”

மேலும்  ‘எங்கள் விருந்தினர் –  எங்கள் கடவுள்’ என்று பொருள்படும் ‘அதிதி தேவா பாவா’ என்ற பழைய இந்திய பழமொழியைக் குறிப்பிட்ட நீதிபதி நலாவடே, “இந்த வழக்கின் மூலம், நம்முடைய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின்படி நாம் உண்மையிலேயே செயல்படுகிறோமா?” என்ற கேள்வியை எழுப்பிய அவர், “நாடு முழுவதும் CAA மற்றும் NRC வரைவுகளுக்கு எதிரான போராட்டங்களை குறிப்பிட்ட நீதிமன்றம், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஊர்வலங்கள், தர்ணா நடத்துவதன் மூலம் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 முஸ்லிம்களுக்கு பாரபட்சமானது என்பது அவர்களின் கருத்து. முஸ்லீம் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாது என்று அவர்கள் நம்புகிறார்கள். எனவே அவர்கள் தேசிய குடியுரிமை பதிவுக்கு (என்.ஆர்.சி) எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போது எடுக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கை காரணமாக முஸ்லிம்களின் மனதில் அச்சம் ஏற்பட்டள்ளது என்பது உண்மை. இந்த நடவடிக்கையின் மூலம் மறைமுகமாக எந்த வடிவத்திலும், எந்த விஷயத்திலும் இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்று எச்சரிக்கிறது. மற்ற நாடுகளின் முஸ்லிம்களுடன் தொடர்பு வைத்திருப்பதற்கு கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் இந்த வெளிநாட்டினரை கைது செய்திருப்பது அதன் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

எனவே, மாநில அரசு அரசியல் கட்டாயத்தின் காரணமாக  வெளிநாட்டினருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதாக நீதிமன்றம் ஊகிக்கிறது. இதனால் வெளிநாடினர்களுக்கு எதிரான  அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது.” என்று தீர்ப்பளித்தார்.

இதே அமர்வு தான்  CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை “தேசவிரோதிகள் அல்லது துரோகிகள்” என்று அழைக்க முடியாது என்றும், 2020 பிப்ரவரியில் போடப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதத்தில், தப்லீக் ஜமாஅத் நடவடிக்கையில் பங்கேற்ற வெளிநாட்டினருக்கு எதிரான வழக்குகளை, அவர்கள் ஏற்கனவே போதுமான அளவு தண்டனை பெற்றுவிட்டனர் என்று சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு இல்லாமல், தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கான அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
1
0
Would love your thoughts, please comment.x
()
x