சென்னை:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய தமிழகத்தில் சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் இன்று 3வது கட்ட சிறப்பு முகாம் நடக்கிறது. நாளை (ஞாயிறு) 4வது கட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.
தமிழகத்தில், கடந்த 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் 1.1.21ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் பெயரை சேர்க்க, நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்ய விரும்புபவர்கள் நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி, தமிழகத்தில் கடந்த மாதம் 21 மற்றும் 22ம் தேதி இரண்டு கட்டங்களாக சிறப்பு முகாம் நடந்தது.
மொத்தமுள்ள சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் (பள்ளிகள்) இன்று 3வதுகட்ட சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. 4வது கட்ட சிறப்பு முகாம் நாளை (ஞாயிறு) நடக்கிறது. வருகிற ஜனவரியில் கலர் படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். 2021ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படுகிறது.
