“கொரோனா தடுப்பூசியை பெறுவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை” – சுகாதார அமைச்சகம்

கொரோனா தடுப்பூசியை பெறுவது தொடர்பாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்தது.
அமெரிக்க மருந்து நிறுவனமான பைசர் தங்களது கொரோனா தடுப்பூசி 90% பயனுள்ளதாக இருப்பதாக நேற்று (நவ., 09) அறிவித்தது. இந்த நிலையில் இன்று சுகாதார அமைச்சக அதிகாரி ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் கொரோனா தடுப்பூசியை பெற பைசர் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. கொரோனா தடுப்பூசி நிர்வாகத்தில் உள்ள தேசிய வல்லுநர் குழுவினர் உள்நாடு மற்று வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்து தடுப்பூசி உற்பத்தியாளர்களுடனும் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது என்றார்.
மேலும் இந்தியாவில் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்த சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரிசோதனையில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 11.96 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த வாரம் தினசரி 11 லட்சம் பரிசோதனைகள் நடந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு வீதம் 4.2% ஆக உள்ளது. அதே போல் 79 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமானவர்களில் எண்ணிக்கையில் இந்தியா முன்னணியில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38,703 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. 448 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 127,059 ஆக அதிகரித்துள்ளது.