பா.ஜ.க-வினர் திருத்தணியில் நுழைய தடை விதித்த காவல்துறை!!

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் திருத்தணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தடையை மீறி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தனது ஆதரவாளர்களுடன் திருத்தணியை நோக்கி புறப்பட்டார்.
இதனையொட்டி, அக்கட்சியின் மாநில முன்னணி தலைவர்கள் சிலர் நேற்று மாலையே திருத்தணிக்கு வந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து முன்னணி நிர்வாகிகளும், தொண்டர்களும் திருத்தணிக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். இன்று காலை வேல் யாத்திரையை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும், அதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆகியோர் நிச்சயம் கலந்துகொள்வார்கள் என்றும் பா.ஜ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, பா.ஜ.க-வினருக்கு திருத்தணியில் நுழைய காவல்துறை தடை விதித்திருக்கிறது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து திருத்தணிக்கு வரக்கூடிய வாகனங்களை மாவட்ட எல்லைகளிலேயே தடுத்து நிறுத்துகிறார்கள். யாத்திரையில் கலந்துகொள்பவர்களாக தெரிந்தால், அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்புகிறார்கள். பொதுமக்களாக இருக்கும் பட்சத்தில், அடையாள அட்டைகளை சரிபார்த்தப் பின்னர், மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கிறார்கள். இதேபோல், திருத்தணி கோயில் முன்பும் தடுப்புகளை அமைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்களும் அதிகளவில் கோயிலுக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். பக்தர்களிடமும் விசாரணை நடத்தும் போலீஸார், ஏதாவது ஓர் அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கிறார்கள்.