ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டும் எம்.எல்.ஏ.!!!

நடிகர் நடிகைகளுக்கு அவரது ரசிகர்கள் கோவில் கட்டி வழிபடுவதை பார்த்திருக்கிறோம். இதேபோல அவரவருக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் இறந்த பின்னர் கோவில் கட்டிய நிகழ்வுகள் உள்ளன. ஆனால் அரசியில் தலைவருக்கு அதுவும் அவர் உயிரோடு இருக்கும்போதே கோவில் கட்டிய நிகழ்வு நடந்திருக்கிறது.
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளும்கட்சி எம்.எல்.ஏ கோவில் கட்ட திட்டமிட்டு பூமி பூஜை மேற்கொண்டுள்ளார். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கோபாலபுரம் தொகுதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ தலாரி வெங்கட்ராவ். அவர் கோபாலபுரம் மண்டலம், ராஜம்பாளையத்தில் ஜெகன் மோகனுக்கு கோவில் கட்டுவதற்காக இன்று அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து எம்.எல்.ஏ வெங்கட்ராவ் கூறுகையில் “முதல்வர் ஜெகன்மோகன் நலத்திட்டங்களை வருங்கால தலைமறையினரும் நினைவு கூறும் விதமாக அவரை ஒரு கடவுளாக கருத வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கோயில் கட்டப்படுகிறது. மக்களின் அவல நிலையை அறிந்து கொள்ள நாட்டில் யாரும் செய்யாத வகையில் ராஜசேகர ரெட்டியும் அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பாத யாத்திரை மேற்கொண்டு மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதனையே நல திட்டங்களாக அறிவித்து செயல்படுத்தி வருகின்றனர்.

ஒய்.எஸ். குடும்பத்தினர் மக்களுக்கு சேவை செய்வதற்காக பிறந்துள்ளனர். இதற்காகதான் கடவுள் அந்த குடும்பத்தை பூமிக்கு அனுப்பியுள்ளார். எனவே எந்தவொரு தீய சக்திகளும் முதல்வர் ஜெகன்மோகனை நெருங்காமல் தடுக்கும் நோக்கத்துடன் அவருக்கு கோயில் கட்டுகிறேன்” என்று தெரிவித்தார்.