மான்செஸ்டரில் பாகிஸ்தான் தோல்விக்கு இதுதான் காரணமா? முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் சாடல்!!

மான்செஸ்டரில் இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்த நிலையில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை 150 ரன்களுக்குள் இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது.
ஆனால் கிறிஸ் வோக்ஸ், பட்லர் ஆகியோர் இணைந்து அணியை வெற்றி பெறச் செய்தனர், இருவரும் 139 ரன்களைச் சேர்க்க ஆட்டம் மாறிப்போக, தற்போது இங்கிலாந்து தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறும்போது, “தோல்வி நிச்சயம் பாகிஸ்தான் அணியையும், பாகிஸ்தான் ரசிகர்களையும் காயப்படுத்தியிருக்கும். வெற்றி தோல்வி கிரிக்கெட்டின் அங்கம்தான். ஆனால் கேப்டன் அசார் அலி சில விஷயங்களைக் கோட்டை விட்டார்.
வோக்ஸ் களமிறங்கும் போது பவுன்சர்கள் வீசவில்லை. ஷார்ட் பிட்ச் பந்துகளும் வீசவில்லை, வோக்ஸை நன்றாக நிலைக்கச் செய்து விட்டனர். ரன்கள் சுலபமாக வந்தன.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி என்றாலே லாவகமாக, கணிக்க முடியாத தன்மையுடன், ஆக்ரோஷமாக ஆடுவது தான். வந்து சும்மா லைன் அண்ட் லெந்தில் வீச நாம் என்ன கவுன்ட்டி கிரிக்கெட்பவுலர்களா? நாள் முழுதும் அப்படி வீசிக் கொண்டிருக்க முடியுமா?
நசீம் ஷா, ஷாஹின் அஃப்ரீடிக்கு எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் 18 முதல் 20 ஓவர்களை வீச கேப்டன் அசார் அலி அனுமதிக்க வேண்டும். அதுதான் நல்ல திட்டம்” என்று வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.