நிவர் புயல் காரணமாக தமிழக துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு!!

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் காரணமாக காரைக்கால் துறைமுகத்தில் இன்று காலை 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 740 கிலோமீட்டர், புதுச்சேரியில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
நிவர் புயல் நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. காரைக்கால் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு கடலுக்குள் சென்ற விசைப்படகுகள் திரும்பி வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் கரைக்குத் திரும்பிக்கொண்டிருப்பதாகவும் விசைப்படகு மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கடலூர் துறைமுகத்தில் இன்று காலையில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலும் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை தொடர்பாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், மீனவர்களை எச்சரிக்கும் வகையிலும் திங்கள்கிழமை 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து எண்ணூர், நாகை, பாம்பன் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.