உடல்நலக் குறைபாடுக் காரணமாக அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்..

உடல்நலக் குறைபாடுக் காரணமாக டெல்லி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதகாலமாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்(74) சிகிச்சை பெற்று வந்தார். அவருக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இன்று அவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அவரது மறைவுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “ராம்விலாஸ் மறைவின்மூலம் இந்த தேசம் தொலைநோக்குப் பார்வைகொண்ட ஒரு தலைவரை இழந்திருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினராக நீண்டகாலம் திறம்பட செயலாற்றியவர் அவர். ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்தவர் அவர். அவசர நிலைப் பிரகடனப்படுத்தபோது ஜெய்பிரகாஷ் நாராயணின் வழிகாட்டுதலின்படி அதற்கு எதிராகப் போராடியவர். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் , தனது இரங்கல் குறிப்பில், “எனது வருத்தத்தைப் பதிவு செய்ய வார்த்தைகள் இல்லை. தேசிய அளவில் அவரது மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் என்பது எப்போதும் நிரப்ப முடியாதது. ராம்விலாஸ் பஸ்வானின் மறைவு எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட இழப்பாகும். நல்ல நண்பரை நான் இழந்துவிட்டேன். ஒவ்வொருவரும் வாழ்வை மரியாதையுடன் வாழ வேண்டும் என்று எண்ணியவர் அவர். கடின உழைப்பாளி. அமைச்சரவைக் கூட்டங்களில் அவரது ஆலோசனை பயனுள்ளவையாக இருந்திருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.