கொரோனா தொற்றின் காரணமாக இந்த ஆண்டு வேளாங்கண்ணி திருவிழாவிற்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியர்!!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய அன்னை திருவிழாவிற்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா வருகிற 29-ந் தேதி(சனிக்கிழமை) அன்று தொடங்க உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது.
ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் திருவிழாவுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருகை புரிய தடை செய்யப்படுகிறது. மேலும் வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித ஆரோக்கிய அன்னையின் ஆண்டு பெருவிழாவினை பொதுமக்கள் கண்டு களித்திடும் வகையில் மாற்று ஏற்பாடாக ஆலய ஆராதனையை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்திட வேளாங்கண்ணி பேரலாயத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதாலும், கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுத்திடவும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.