ஓராண்டிற்கு பின் காஷ்மீரிலிருந்து வெளியேறும் துணை ராணுவப் படையினர்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குவிக்கப்பட்டிருந்த பல்வேறு துணை ராணுவத்தின் 100 கம்பெனி படைகளை மத்திய அரசு விலக்கிக் கொண்டுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370-வது சட்டப்பிரிவு கடந்த ஆண்டு ஆக., 5-ல் நீக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் மாநிலத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இணைய, தொலைபேசி சேவைகள் துண்டிப்பு, அரசியல் கட்சித் தலைவர்கள் சிறை வைப்பு, மாநிலத்தின் பல பகுதிகளில் துணை ராணுவ படையினர் குவிப்பு போன்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
தற்போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஓராண்டை கடந்துள்ள நிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 40 கம்பெனிகள், எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை ரோந்து படையான எஸ்.எஸ்.பி ஆகியவற்றிலிருந்து தலா 20 கம்பெனிகள் என மொத்தம் 100 கம்பெனிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கம்பெனிகளைச் சேர்ந்த அனைத்து துணை ராணுவ வீரர்களையும் அவரவர் இடங்களுக்கு திருப்பி அனுப்புமாறு உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வுத்தரவு புதனன்று உடனடியாக நடைமுறை வந்தது.