கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நாய் மரணம்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த மே மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் வளர்ப்பு நாய் தற்போது உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமாக உள்ளது. 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 23 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் நியூயார்க்கைச் சேர்ந்த ராபர்ட் மகானே என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவர் வீட்டில் இருந்த 7 வயது நாய்க்கும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.
தொடர்ந்து சிரமத்தை எதிர்கொண்டதால் கால்நடை பல்கலைக்கழகத்திற்கு நாயை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அதற்கு மே மாதம் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. இதுவே அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் வளர்ப்பு நாய். சில நாட்களில் அதன் உடல் நிலை மோசமடைந்து, மூச்சிரைப்புடன் கட்டி கட்டியாக ரத்த வாந்தியும் எடுத்துள்ளது. இதனால் ஜூலை 11-ம் தேதி படி எனப்படும் அந்த நாயை கருணைக் கொலை செய்துள்ளனர்.
மேலும் அந்த நாய்க்கு நோயெதிர்ப்பு மண்டல புற்றுநோயான லிம்போமாவுக்கான அறிகுறியும் ரத்த பரிசோதனையில் காணப்பட்டதாக கூறுகின்றனர். அமெரிக்காவில் மொத்தம் 12 நாய்கள், 10 பூனைகள், ஒரு புலி மற்றும் சிங்கம் ஆகியவை இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு பரவுகின்றன.