மாணவர்கள் வாழ்க்கையுடன் விளையாடாதீர்கள் – நுழைவுத் தேர்வுகள் குறித்து மணீஷ் சிசோடியா

மருத்துவப் படிப்பு மற்றும் ஐ.ஐ.டி.களில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முடிவை மறுபரிசீலனை செய்யும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தி
இந்தியாவின் கொரோனா வைரஸ் வழக்குகள் 30 லட்சத்தை கடந்த நிலையில், சிசோடியா “மாணவர்களின் வாழ்க்கையுடன் மத்திய அரசு விளையாடுகிறது” என்று ட்வீட் செய்துள்ளார். தொடர் ட்வீட்டுகளில் அமைச்சர், “ஆயிரம் பாதுகாப்பான மாற்று வழிகள் இருக்க முடியும்” என்று கூறினார்.
“21 ஆம் நூற்றாண்டில், நுழைவுத் தேர்வுக்கு மாற்றீட்டை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூற முடியாது. மாணவர்களின் நலனைப் பற்றி சிந்திக்க வேண்டியதே அரசாங்கத்தின் நோக்கம். நீட்-ஜேஇஇக்கு ஆயிரம் பாதுகாப்பான மாற்று வழிகள் இருக்கலாம்” என்று அவர் கூறினார்.
“உலகளவில் புதிய கல்வி முறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்தியாவில் இதை ஏன் செய்ய முடியாது? ஜேஇஇ நுழைவு தேர்வு என்ற பெயரில் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையுடன் மத்திய அரசு விளையாடுகிறது. நுழைவுத் தேர்வுகள் நாடு முழுவதும் அகற்றப்பட்டு மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். முன்னெப்போதுமில்லாத நெருக்கடியின் போது, முன்னெப்போதுமில்லாத வகையிலான ஒருநடவடிக்கை தீர்வைக் காண உதவும் என்று அவர் கூறினார்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் இரண்டாம் வாரமும், ஐஐடி பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவு தேர்வு செப்டம்பர் முதல் வாரமும் நடைபெற உள்ளது இத்தேர்வை ஊற்றி வைக்கக்கோரி லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து சமூக ஊடகங்கள் வாயிலாக வலியுறுத்தி வருகின்றனர் ஆனால் அதனை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை.