தமிழகத்தில் இ-பாஸ் ரத்தாகுமா? இன்று தலைமைச் செயலாளர், முதல்வருடன் முக்கிய ஆலோசனை!!!

தமிழகத்தில், இ-பாஸ் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்தது. இ-பாஸ் முறையை ரத்து செய்ய, அரசியல் கட்சிகள், பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இ-பாஸ் முறை தொடரும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இருப்பினும், கடந்த 17-ம் தேதி முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பெயரில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே எல்லைகளை அடிக்கடி மூடி வருவதாகவும், இது நாடு முழுவதும் விநியோக சங்கிலிகளை சீர்குலைப்பதாக உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகம், பல நினைவூட்டல்களை மாநிலங்களுக்கு அனுப்பியிருந்தாலும் பிரச்சினை நீடித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தவிர்க்க மாநிலங்களுக்கு இடையிலான மக்கள், சரக்கு போக்குவரத்தை தடை செய்யக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு நேற்று முன்தினம் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

உள்ளூர் அளவில் மாவட்ட நிர்வாகத்தால் அல்லது மாநில அரசால் விதிக்கப்பட்ட சரக்கு, பொதுமக்கள் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகள், பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களை மீறுவதாகும். இது வேலைவாய்ப்புகளை பாதிக்கிறது. மேலும் சரக்குகள் மீதான தடை நீடிப்பதால் விநியோகச் சங்கிலி அறுபடுகிறது. எனவே சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்துக்கு மாநில அரசுகள் தடை விதிக்கக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தை தொடர்ந்து, தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலர் கே.சண்முகம் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அதன்பின் முதல்வருடன் ஆலோசித்து, இ-பாஸ் ரத்து செய்வது குறித்து முடிவு அறிவிக்கப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x