ஆர்.பி.ஐ., அதிகாரி என சிரித்து பேசி ரூ.19 லட்சத்தை ஏமாற்றிய பெண்

ரிசர்வ் வங்கியின் அந்நிய செலாவணி துறை அதிகாரி என்று கூறிக்கொண்டு, காஷ்மீரைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து ரூ.19 லட்சத்தை பெண் ஒருவர் சுருட்டியுள்ளார்.
காஷ்மீரின் ரியாசி மாவட்டம் கத்ராவைச் சேர்ந்த ரவீந்தர் சிங் நாக் எனும் நபர் தான் பணத்தை பறிகொடுத்துள்ளார். புது டில்லியில் உள்ள ரிசர்வ் வங்கியின் அந்நிய செலாவணி துறையில் அதிகாரியாக உள்ளதாக கூறிக்கொண்ட ஒரு பெண் தலைமையிலான இணைய மோசடி கும்பல் ரூ.19 லட்சத்துக்கு மேல் தன்னிடம் மோசடி செய்ததாக புகார் தெரிவித்துள்ளார்.
இம்மோசடியில் ஈடுபட்ட சோனி ஷர்மா மற்றும் அவரது ஆறு கூட்டாளிகள் மீது ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தது, முதற்கட்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் டில்லியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
தன்னிடம் ஒரு பெரிய தொகை இருப்பதாக கூறிய அப்பெண், கூட்டாளர்களுடன் இணைந்து தொழில் தொடங்குவதில் ஆர்வம் இருப்பதாக கூறினார். மேலும் முதலீடுகளுக்கு பெரும் வருமானத்தை அளிப்பதாக உறுதியளித்ததார். இதனால் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த ரூ.19,33,174-ஐ அவரிடம் கொடுத்தேன். அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்பணத்தை பல்வேறு வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க சொன்னார்கள் என்றார்.
இதனைத் தொடர்ந்து அதிகாரி என கூறி பெண் உட்பட 6 பேரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.