இந்திய போர் கப்பல்களில் பணிபுரிய முதன்முதலாக நியமிக்கப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகள்!

இந்தியக் கடற்படை வரலாற்றில் முதல் முறையாக போர் கப்பல்களில் ஹெலிகாப்டர்களை இயக்க இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் ராணுவ வல்லமை படைத்த நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருந்து வருகிறது. சுதந்திரம் பெற்ற காலம் முதல் இந்திய பாதுகாப்புத்துறையின் முப்படைகளிலும் ஆண் வீரர்கள் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆனால் தற்போதைய காலகட்டங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வளர்ந்து வருவதை கண்ட மத்திய அரசு, ராணுவத்தில் சமத்துவத்தை கொண்டுவர படிபடியாக முப்படைகளிலும் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் பெண்களையும் நியமித்து வருகிறது.
அந்த வகையில் இந்தியக் கடற்படை வரலாற்றில் முதல் முறையாக சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி மற்றும் சப் லெப்டினன்ட் ரிதி சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் இந்தியப் போர் கப்பல்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இரு அதிகாரிகளும் உலகில் சிறந்த மல்டி ரோல் ஹெலிகாப்டர்களாக கருதப்படும் இந்த எம்.எச் -60 ரக ஹெலிகாப்டர்களை இயக்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை அதன் வரிசையில் பல பெண் அதிகாரிகளை நியமித்திருந்தாலும், பெண்கள் இதுவரை, பல காரணங்களால் போர்க்கப்பல்களில் நியமிக்கப்படாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்திய விமானப்படையில் (ஐ.ஏ.எஃப்) புதிதாக சேர்கப்பட்டுள்ள ஐந்து ரஃபேல் போர் விமானங்களில் ஒன்றை பெண் போர் விமானிகள் இயக்கலாம் என அறிவிப்பு வெளியான அடுத்த நாளிலேயே கடற்படை போர் கப்பல்களில் பெண் அதிகாரிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது 10 போர் விமானிகள் உட்பட 1,875 பெண்கள் இந்திய விமானப்படை சேவையில் உள்ளனர். பதினெட்டு பெண் அதிகாரிகள் நேவிகேட்டர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.