கள்ளக்காதலை கண்டித்ததால் விபரீதம்.. கணவரை எரித்துக் கொன்ற மனைவி..?

கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை எரித்துக் கொன்று நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். 

தேனி மாவட்டம் க.புதுப்பட்டி அருகே இடையன்குளத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

எரிந்த நிலையில் கிடந்தவரின் எலும்புகளை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதே பகுதியில் யாரேனும் காணாமல் போயுள்ளனரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. டி.என்.ஏ. பரிசோதனையில் கிடைத்த முடிவின் படி இறந்தவர் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள போயன்மார் தெருவைச் சேர்ந்த நாகராஜ் (42) என தெரியவந்தது. 

இது குறித்து அவரது மனைவி முத்துமாரி (37) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தனது கணவர் வேலைக்கு சென்று விட்டு எப்போதாவது ஒரு முறை வீட்டுக்கு வருவார் என்றும் அதனால் அவரை தேடாமல் இருந்து விட்டதாக கூறியுள்ளார். இருந்த போதும் அவரது நடவடிக்கையை மறைமுகமாக போலீசார் கண்காணித்து வந்தனர். இதில் அவர் கள்ளக்காதல் பிரச்சனையால் கணவரை கொன்றது தெரிய வந்துள்ளது. 

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், முத்துமாரிக்கும் குலாளர் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. செல்வராஜ் க.புதுப்பட்டியில் செங்கல் காளவாசல் வைத்து நடத்தி வருகிறார். அங்கு வேலை பார்த்த முத்துமாரி, அவருடன் நெருக்கத்தில் இருந்ததை பார்த்து கணவர் நாகராஜ் கண்டித்துள்ளார். இதனால் நாகராஜை தீர்த்து கட்ட முத்துமாரி மற்றும் செல்வராஜ் முடிவு செய்தனர். 

அதன்படி சம்பவத்தன்று நாகராஜூக்கு அளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி கொடுத்து போதை ஏறிய நிலையில் அவரது கழுத்தை நெறித்து கொன்றனர்.

பின்னர் உடல் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகிய நிலையில் விட்டுச் சென்றனர். ஆனால் போலீசார் எலும்புகளை வைத்து டி.என்.ஏ. பரிசோதனை நடத்தியதில் கொலை செய்யப்பட்டவரின் விபரம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் முத்துமாரியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள செல்வராஜை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட முத்துமாரி உத்தமபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x