கர்மயோகி திட்டம் – அரசு பணிகளின் சீர்த்திருத்தத்திற்கான நடவடிக்கை

நாடு தழுவிய அளவில் அரசு அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கான ‘கர்மயோகி’ எனும் திட்டத்திற்கு பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில் ‘கர்மயோகி’ திட்டமும் ஒன்று. இது அதிகாரப்பூர்வமாக, ‘சிவில் சர்வீசஸ் திறன் மேம்பாட்டுக்கான தேசிய திட்டம்’ என்று அழைக்கப்படும். இத்திட்டம் மனிதவள நிர்வாகத்தை மாற்றியமைக்க உருவாக்கப்பட்டுள்ளது. ‘விதிகள் அடிப்படையிலான’ நடைமுறைகளுக்கு பதிலாக ‘பணிகள் அடிப்படையிலான’ நடைமுறையை உருவாக்குவதே இதன் நோக்கம் என பணியாளர் மற்றும் பயிற்சி துறை கூறியுள்ளது.
இது பற்றி பேசிய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை செயலாளர், ‘இந்தத் திட்டம் ஒரு அரசு ஊழியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த அரசாங்கத்தின் பார்வையை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய அரசு ஊழியர், உலகின் சவால்களை எதிர்கொள்ள, புதுமையான முற்போக்கான மற்றும் ஆற்றல்மிக்கவராக இருக்க வேண்டும், மேலும் தொழில்நுட்பத்தை இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.’ என்றார்
மேலும், ‘இது போன்ற பயிற்சிகளுக்காக மத்திய அரசு திறன் மேம்பாட்டு ஆணையத்தை அமைக்கும். இந்த ஆணையம் பயிற்சியாளர்கள் மற்றும் தேவையான வளங்களை பயிற்சி நிறுவனங்களுக்கு வழங்கும். அதன் செயல்பாட்டை மேற்பார்வையிடும். இதன் மூலம் வளர்ச்சி இலக்குகள் குறித்த பொதுவான புரிதல் இருக்கும். இத்திட்டம் செயல்படத் தொடங்கும் அரசு நிர்வாகத்தில் நிகழும் உலகின் மிகப்பெரிய சீர்திருத்தமாக அமையும்’ என்று தெரிவித்தார்.