“படங்களை தந்தால் தியேட்டர்… இல்லையென்றால் திருமண மண்டபம்… எச்சரிக்கும் தியேட்டர் அதிபர்கள்!!

படங்களே வெளியிடவில்லை என்றால் நாங்களும் ஐபிஎல் மேட்ச், கல்யாணம் மண்டபம் என மாறிக்கொள்கிறோம். அவர்களுக்கு ஒரு வழி இருக்கும் போது, எங்களுக்கு ஒரு வழி இருக்கும் என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் எழுதிய கடிதத்திற்கு தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் பதிலளித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 5 மாதமாக மூடப்பட்டிருக்கும் தியேட்டர்கள் அக்டோபர் முதல் திறக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய படங்களை திரையிட 6 நிபந்தனைகளை விதித்து நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தியேட்டர் அதிபர்கள் சங்கத்திற்கு கடிதம் எழுதியது.
இதற்கு பதலளித்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருப்பதாவது: “தயாரிப்பாளர்களின் எந்த நிபந்தனையையும் ஏற்க முடியாது. அப்படி ஏற்காவிட்டால் படங்களை வெளியிட முடியாது என்கிறார்கள். படங்களை வெளியிடுவது, வெளியிடாததும் அவர்களுடைய விருப்பம். அவர்கள் சொந்த பணத்தைப் போட்டு படம் எடுத்துள்ளார்கள். விருப்பப்பட்டால் வெளியிடப்படும், விருப்பமில்லை என்றால் விட்டுவிடட்டும். நாங்கள் படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.
படங்களே வெளியிடவில்லை என்றால் நாங்களும் ஐபிஎல் மேட்ச், கல்யாணம் மண்டபம் என மாறிக்கொள்கிறோம். அவர்களுக்கு ஒரு வழி இருக்கும் போது, எங்களுக்கு ஒரு வழி இருக்கும். எந்த தயாரிப்பாளரும் தியேட்டருக்கு படங்களை நேரடியாக கொடுப்பதில்லை. சர்வீஸ் புரவைடர்கள் தான் எங்களுக்கு தருகிறார்கள். எதுவாக இருந்தாலும் தயாரிப்பாளர்கள் அவர்களிடம் தான் பேச வேண்டும். தயாரிப்பாளர்கள் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் தமிழகத்தில் திரையரங்குகள் பல மூடப்பட்டுவிடும்.” இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு முழுவதும் மீண்டும் தியேட்டர்களை திறப்பது குறித்து மத்திய அரசு கடந்த 8 ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட சினிமா தியேட்டர் உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதில், கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ஐபிஎல், உலகக் கோப்பை, ஒலிம்பிக் போன்ற விளையாட்டுப் போட்டிகளை தியேட்டர்களில் ஒளிபரப்ப மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தங்களது கோரிக்கையை பதினைந்தாம் தேதி நடக்கும் கூட்டத்தில் மத்திய அரசிடம் வலியுறுத்தவும் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதேபோல் தியேட்டர்களில் படம் வெளியாகி ஓராண்டு கழித்து ஓடிடியில் வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.