தமிழகத்தின் 4 அரசு பி.எட். கல்லூரிகளுக்கு தடை விதித்த தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம்!!

4 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிப்பதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே பல்கலைக்கழக இணைப்பு அனுமதிபெறாத மற்றும் அனுமதி ரத்து செய்யப்பட்ட 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 56 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்கலை கழக இணைப்பு அனுமதி பெறாத 13 பி.எட். கல்லூரிகளிலும் மாணவர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 4 அரசு பி.எட். கல்லூரிகளில் 2020-21 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தற்காலிக தடை விதிப்பதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது. அந்த வகையில் சென்னை மெரினாவில் உள்ள லேடி வில்லிங்டன் கல்லூரி போலி ஆவணங்களை சமர்ப்பிக்காததால் அங்கு பி.எட். சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டது.
அதே போல் புதுக்கோட்டை அரசு பி.எட். கல்லூரியில் 16 ஆசிரியருக்கு பதில் 12 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரியில் 16 ஆசிரியருக்கு பதில் 9 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். திருமயம் அரசு பி.எட். கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் என்சிடிஇ விதிப்படி நியமிக்காததால் அங்கும் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.