ரஜினி மத்திய அமைச்சரா? பொங்கிய சீமான்

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தரமணியில் அமைந்துள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதன்மை இயக்குநராக ஆர்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, ரஜினி சொல்லித்தான் நியமித்ததாக கூறப்படுகிறது.
ஆர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்ட செய்தியை, மத்திய அரசு டிவிட்டரில் வெளியிட்டுள்ளதோடு, அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், நடிகர் ரஜினிகாந்த்தின் பக்கத்தையும் இணைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குனரை நியமித்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், “மத்திய அரசு ரஜினிகாந்தை குறிப்பிட வேண்டிய நிர்பந்தம் என்ன வந்தது?” என்று மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
“மத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக முடிவிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை? மத்திய அரசு தனது கீழுள்ள துறையின் பதவிகளுக்கு நியமனம் செய்கிறபோது ரஜினிகாந்துக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நெருக்கடியென்ன? அவர் என்ன மத்திய அமைச்சரா? மாநில அமைச்சரா? மக்கள் பிரதிநிதியா? ஐ.ஏ.எஸ். அதிகாரியா? அவருக்கு எதற்கு நியமனச் செய்தியைக் கூற வேண்டும்?
அரசின் எவ்விதப் பதவியிலும் இல்லாத அவருக்கு எதற்கு அளப்பரிய முதன்மைத்துவம்? யார் கொடுத்த நெருக்கடி? ரஜினிகாந்த் என்பவர் ஒரு நடிகர் அவ்வளவுதானே! அதனைத் தாண்டி, மக்களோடு அவருக்கு என்ன தொடர்பு இருக்கிறது? ரஜினிகாந்தை திருப்திப்படுத்தத்தான் சந்திரசேகரனை இயக்குநராக நியமனம் செய்தார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழுக்கும், தமிழர்களுக்கும் இன்னல்கள் நேரிட்டபோது வாய்திறக்காமல் இருந்த ரஜினிகாந்த், இவ்விவகாரத்தில் கடிதத்தின் மூலம் நன்றி பாராட்டியிருப்பதன் அரசியலென்ன? வெளிப்படைத்தன்மைத் துளியுமின்றி, தனிநபர்களை மகிழ்விக்க, அவர் பரிந்துரைத்த நபரைப் பதவியில் அமர்த்தி, அதிகார அத்துமீறலில் ஈடுபட்ட மத்திய அரசின் இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் நிஷாங்க்குக்கும், நடிகர் ரஜினிகாந்துக்கும் உள்ள தொடர்புகள் குறித்து தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பதவியை நியமிப்பதில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் தலையீடு இருப்பது அப்பட்டமாகத் தெரிவதால், மத்திய அமைச்சர் உடனடியாகத் தனது பதவி விலக வேண்டும்” என்று சீமான் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.