“ஆட்டநாயகன் விருதை அம்பயருக்கு தான் கொடுக்க வேண்டும்!” முன்னாள் வீரர் சேவாக்கின் நக்கல் டிவீட்!
பஞ்சாப் -தில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டியின் ஆட்டநாயகன் அம்பயர் தான் என்று திருப்பத்தை ஏற்படுத்திய அம்பயரின் முடிவை நக்கலாக விமர்சித்துள்ளார் வீரேந்திர சேவாக்.
ஐபிஎல் சீசன் 13-ன் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
பஞ்சாப் அணி 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. பின் களம் இறங்கிய மயங்க் அகர்வால் அதிரடியாக விளையாடி 60 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். 3 பந்துகளில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஜோர்டானும் ஆட்டமிழக்க போட்டி டையில் முடிந்தது. இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு நகர்ந்தது.
சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 2 ரன்களை மட்டுமே எடுத்தது. 6 பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் ஓவரில் டெல்லி அணி சார்பாக பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினர். இரண்டு பந்துகளில் 3 ரன்கள் அடித்து டெல்லி அணி எளிதாக வெற்றி பெற்றது.
I don’t agree with the man of the match choice . The umpire who gave this short run should have been man of the match.
Short Run nahin tha. And that was the difference. #DCvKXIP pic.twitter.com/7u7KKJXCLb— Virender Sehwag (@virendersehwag) September 20, 2020
இந்நிலையில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது 19-வது ஓவரில் மயங்க் அகர்வாலும் ஜார்டனும் இரு ரன்கள் ஓடி எடுத்தார்கள். ஆனால் ஓடி முடிக்கும்போது கிரீஸை பேட் தொடாததால் ஒரு ரன்னைக் குறைவாக வழங்கினார் நடுவர் நிதின் மேனன். ஆனால் தொலைக்காட்சி ரீபிளேயில் ஜார்டனின் பேட் கிரீஸைத் தொட்டது நன்குத் தெரிந்தது. கடைசியில் ஆட்டம் சமன் ஆனதில் நடுவர் முடிவு பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. அந்த இரண்டு ரன்களை அவர் வழங்கியிருந்தால் பஞ்சாப் அணி தில்லியைத் தோற்கடித்திருக்கும்.
நடுவரின் இந்த முடிவுக்கு பல வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இது குறித்து ட்விட்டரில் முன்னாள் வீரர் சேவாக் கூறுகையில், “ஆட்ட நாயகன் விருதுத் தேர்வை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒரு ரன்னைக் குறைத்த நடுவருக்கு ஆட்ட நாயகனுக்கு தான் விருது அளித்திருக்க வேண்டும். அதுதான் வித்தியாசப்படுத்திவிட்டது” என்று கூறியுள்ளார்.