இப்படி தேர்வெழுதினால் “அரியர்ஸ்” என்ற வார்த்தை பயன்பாட்டிலேயே இருக்காது!!!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவ, மாணவிகள் செமஸ்டர் தேர்வுகளை கணினி மூலம் ஆன்லைனிலும், தேர்வு மையங்களுக்கு வந்து ஆப்லைனிலும் எழுதலாம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்த பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல் படி இறுதி செமஸ்டர் தேர்வின்போது மாணவர்கள் புத்தகம், குறிப்பேடுகளுடன் தேர்வெழுதலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.
செமஸ்டர் தேர்வு
அதேபோல, “தாங்கள் எந்த முறையில் தேர்வெழுதுகிறோம் என்பதை மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம்.
அதேசமயத்தில் எந்த முறையில் தேர்வுகளை எழுதவேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாணவர்களை கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது” என்று பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீந்த் சிங் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 95-க்கும் மேற்பட்ட இணைப்பு கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு இன்று செமஸ்டர் தேர்வு தொடங்கியது. அப்போது முதல் முறையாக பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதபின்படி இறுதி செமஸ்டர் திறந்த புத்தகத் தேர்வு முறையில் நடைப்பெற்றது. தேர்வெழுத கல்லூரிகளுக்கு வந்த மாணவ, மாணவிகள், தேர்வு அறைக்குள் புத்தகங்கள், குறிப்புகள் உள்ளிட்ட பிற ஆய்வு பொருள்களையும் எடுத்து வந்தனர். பிறகு அதனைப் பார்த்து தேர்வெழுதினர்.
அதேசமயம் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தகம் உள்ளிட்ட குறிப்புப் பொருள்களை, சக மாணவர்களுடன் பரிமாரிக் கொள்ளாதாவாறு கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வீடுகள் மற்றும் கணினி மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களும் புத்தகம், குறிப்பேடுகளை பார்த்து தேர்வுகளை எழுதினர். ஆன்லைனில் தேர்வெழுதிய மாணவர்கள் A4 வெள்ளைத் தாளில் கறுப்பு மையினால் எழுதி, அதனை ஸ்கேன் செய்து, தேர்வு முடிந்த நேரத்திலிருந்து 30 நிமிடங்களுக்குள் பி.டி.எஃபாக மாற்றி இணையம் மூலம் கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.