விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் 3 நாட்களுக்கு போராட்டத்தை நீட்டித்த பஞ்சாப் விவசாயிகள்!
வேளாண் மசோதாக்களுக்கு எதிரான போராட்டத்தை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்க பஞ்சாப் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
நேற்று நாடு முழுவதும் விவசாயிகள், விவசாய மசோதாவைக் கண்டித்தும், வாபஸ் பெற வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சண்டிகர் – அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் இன்று பெரிய அளவில் போராட்டத்தை துவக்கியுள்ளனர். இதனால் அங்கு சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று வரை போராட்டம் நடக்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மேலும் மூன்று நாட்களுக்கு போராட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் செப்டம்பர் 29ஆம் தேதி வரை போராட்டம் நடைபெறும் என்று விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதையொட்டி ஏற்கனவே இன்று வரை அந்த மாநிலத்தில் இருந்து இயங்கும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. மேலும் ரயில்கள் ரத்து செய்யப்படுமா என்பது இன்று தெரிய வரும்.
சண்டிகர் அம்பாலா தேசிய நெடுஞ்சாலையை மறைத்து பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் ஹன்தேஸ்ரா என்ற இடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு இருக்கும் பஸ் நிறுத்தங்கள் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். இக்கட்சியின் தலைவர் நரிந்தர் சிங் ஷெர்கில் தலைமையில் காசர் ஜூராளி சாலையை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மொஹாலி நகரில் அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் மட்டும் இன்று திறந்து இருக்கும் மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்று பல்வேறு விவசாய அமைப்புகள் அறிவித்து இருந்தன. இதன்படி பல்வேறு மண்டிகளை விவசாயிகள் மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரும் செப்டம்பர் 29ஆம் தேதி வரை போராட்டம் நீடிக்கப்பட்டு இருப்பதால், நாளை பெண்கள் அமைப்பும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளது. வரும் 28ஆம் தேதி பகத் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த நாளில் போராட்டத்தில் இளைஞர் அமைப்பினர் ஈடுபடுவதற்கு முடிவு செய்துள்ளனர்.
”எங்களது விவசாயிகள் போராட்டத்தில் எந்த அரசியல் தலைவர்களையும் பேச அனுமதிக்க மாட்டோம். விவசாய மசோதா வாபஸ் பெறும் வரை எங்களது ஆர்ப்பாட்டம் தொடரும்” என்று கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் அமைப்பின் பஞ்சாப் மாநில செயலாளர் சர்வன் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்.