ஆத்ம நிர்பார் என்ன ஆனது… மோடிக்காக ரூ.8,500 கோடியில் வாங்கப்படும் அமெரிக்க விமானம்

பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களுக்கு அமெரிக்காவிலிருந்து ரூபாய் 8428 கோடி செலவில் அதிநவீன போயிங் விமானம் 2 வாங்கப்பட்டுள்ளது.
மோடி தற்போது வெளிநாட்டு பயணங்களுக்காக 25 ஆண்டுகள் பழமையான ஏர் இந்தியா ஒன் என்ற பெயர் கொண்ட போயிங் 747 விமானத்தை பயன்படுத்தி வருகிறார். இதில் நவீன வசதிகள் பல இல்லாத காரணத்தினால் புதிய விமானம் வாங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனத்திடம் 777 300 ers என்ற அதிநவீன வசதிகள் கொண்ட இரண்டு விமானங்கள் வாங்க ஆர்டர்கள் கொடுக்கப்பட்டன. அவற்றில் முதல் விமானம் அடுத்த வாரம் டில்லியை வந்தடைகிறது. மற்றொரு விமானம் இந்த ஆண்டு இறுதியில் கிடைக்கப்பெறும்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பயன்படுத்தும் ஏர் போர்ஸ் ஒன் விமானத்திற்கு இணையான வசதிகள் இந்தியா வாங்கியுள்ள ஏர் இந்தியா ஒன் விமானத்திலும் உள்ளன. சுயமாக பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஏவுகணை அமைப்பு இதில் உள்ளது
எதிரிகளின் ரேடார் அலைகளை செயலிழக்கச் செய்யும் தொலைதொடர்பு வசதியும் உள்ளது. இது தவிர மிகப்பெரிய விவிஐபி கேபின், மினி மருத்துவமனை ஆகியவை இதில் அடங்கியுள்ளன.
சுயசார்பு இந்தியா என்ற கோஷத்தை சுதந்திர தின உரை மற்றும் அதற்கு முந்தைய கொரோனா காலகட்ட உரைகளின் பொழுது வலியுறுத்தியவர், தற்போது அமெரிக்காவில் இருந்து ரூபாய் 8,500 கோடி செலவில் அந்நாட்டு தயாரிப்பை தனது பயன்பாட்டிற்கு வாங்குவது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.