உ.பி முதல்வர் யோகி பதவி விலக கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்..

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிறுமி மனிஷாவை பாலியல் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சென்னையில் இன்று (வெள்ளிகிழமை) மாலை கலெக்டர் அலுவகம் அருகே வட சென்னை மாவட்ட தலைவர் சாகுல் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது தலித் வகுப்பைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பலவந்தமாக தூக்கிச் சென்று கொடூரமாக கற்பழித்து அந்தப்பெண்ணின் நாக்கை அறுத்து, முதுகெலும்பு மற்றும் கை, கால்களை உடைத்து மோட்டார் வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்று சாலையில் வீசிவிட்டு சென்றது .
மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் உ.பி மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
உ.பி.யில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுக்க தவறிய உ.பி முதல்வர் யோகி ஆதித்ய நாத் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோசங்களை எழுப்பினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துனைத் தலைவர் பா.அப்துல் ரஹ்மான் கண்டன உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது:
ஒரே வாரத்தில் உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற இந்த இரண்டு கூட்டுப் பாலியல் வன்முறை சம்பவங்களும் உலக அரங்கில் இந்தியாவை தலைகுனிய வைத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை ஆட்சி புரியும் யோகியின் காட்டாட்சி தர்பாரில்
மனித உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. மாடுகளுக்கு மருத்துவமனை திறப்பதும், மாடுகளுக்கும், குரங்குகளுக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்குவதும், ராமர் கோவில் கட்டுவதிலும் மும்முரம் காட்டி வருவதுமே யோகி அரசின் செயல்பாடுகளாக இருக்கிறது. முழுக்க முழுக்க மனித நேயத்திற்கு எதிரான செயல்கள் உபி மாநிலத்தில் தொடர்ந்து நடைபெற்ற போதிலும் யோகி அரசு அதைக் கண்டுகொள்வதே இல்லை.
தனக்கு வாக்களித்த மக்களுக்கு எவ்விதமான நன்மைகளையும் செய்யாமலும், நாட்டில் நடைபெறும் அராஜகங்களை, அக்கிரமங்களைக் கண்டு கொள்ளாமலும் யோகி ஆட்சி புரிந்து வருகின்றார்.
மனித இனத்திற்கு எதிரான யோகியின் ஆட்சியில் மக்களின் உயிருக்கும், பெண்களின் கற்பிற்கும் பாதுகாப்பில்லை.
உ.பி மாநிலத்தில் நடைபெறும் வன்முறைகளை துளியும் கண்டு கொள்ளாமல் குற்றவாளிகளுக்கு ஊக்கமளிக்கும் உ.பி முதல்வர் யோகி, இந்த பாலியல் வன்முறை குற்றங்களுக்குப் பொறுப்பேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.