“பெரும்பாலான இந்தியர்களும் எளிய மக்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை” – ராகுல் ஆவேசம்

‘உத்தர பிரதேச முதல்வர் யோகியின் அரசை போலவே, பெரும்பாலான இந்தியர்களும் எளிய மக்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை,’ என்று ராகுல் காந்தி ஆவேசமாக கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராசில் கூட்டு பலாத்காரத்துக்கு ஆளாகி உயிரிழந்த இளம்பெண் விவகாரம், தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்று உபி காவல்துறை கூறி வருகிறது.
இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘ஹத்ராஸ் இளம்பெண் யாராலும் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று உபி முதல்வர் யோகியும், அவரது காவல்துறை அதிகாரிகளும் கூறுகிறார்கள். அந்தப் பெண் யாராகவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாததால் இது போன்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இதில், அவமானகரமான உண்மை என்னவென்றால், உத்தர பிரதேச அரசு, அம்மாநில காவல்துறையைப் போலவே, பெரும்பாலான இந்தியர்களும் எளிய மக்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள், இஸ்லாமியர்கள், பழங்குடியின மக்கள் போன்ற எளியவர்களின் உண்மை நிலை இதுதான்,’ என்று கூறியுள்ளார்.