“மெரினாவுக்கு செல்ல அக்டோபர் 31 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை!” தமிழக அரசு!!

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மெரினா கடற்கரைக்கு செல்ல அக்டோபர் 31 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையை சுத்தப்படுத்துவது,மீன் விற்பனையை முறைப்படுத்துவது மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மீனவர் நல அமைப்பைச் சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் முன்பு விசாரணை நடத்திய நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, மெரினா கடற்கரை பராமரிப்பு குறித்து சென்னை மாநகராட்சிக்குக் கேள்விகள் எழுப்பியிருந்தது.  கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு துறைகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனரா? எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசுத்தரப்பில், “மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகள் அமைப்பதற்கான டெண்டர் வரும் நவம்பர் 9ம் தேதி திறக்கப்படும் எனவும், மூன்று கம்பெனிகள் டெண்டர் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளதால் அதுவரை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை” என தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், “தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் கோரியது, மீன் சந்தை திறப்பது, மெரினாவில் பொதுமக்கள் செல்ல அனுமதிப்பது தொடர்பாக நவம்பர் 11ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்” என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x