தனக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்ட பின்,ஆம்புலன்ஸில் செல்லும் போது தேர்வு எழுதிய மாணவன்!!!

கேரள மாநிலத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டாலும், தேர்வுகள் அந்தந்த மையங்களில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பாதித்ததால் தேர்வுக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட மாணவர் ஒருவர், ஆம்புலன்சில் அமர்ந்து தேர்வு எழுதிய சம்பவம் கேரளாவில் நடந்து உள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அர்ப்போகரா பகுதியை சேர்ந்த அந்த மாணவர் திருநாக்கரா பகுதியில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். அவரது படிப்பிற்கான இறுதி தேர்வுகள் தொடங்கியது. தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் அந்த மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து கொரோனா சிகிச்சை மையத்தில் மாணவர் சேர்க்கப்பட்டார். இதனால் அவர் தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் அவர் தேர்வு எழுதவேண்டும் என விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து அவரை ஆம்புலன்சில் வைத்து தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி அந்த மாணவர் சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஆம்புலன்சில் தேர்வு நடந்த மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்பு தேர்வுக்கான வினாத்தாளை மாணவருடன் வந்த சுகாதரத்துறையினரிடம் தேர்வு கண்காணிப்பாளர்கள் வழங்கினார்.
பின்பு அதனை மாணவரிடம் வழங்கினர். இதையடுத்து மாணவர் ஆம்புலன்சுக்குள் அமர்ந்து தேர்வு நேரமான 11 மணி முதல் 1 மணி வரை தேர்வு எழுதினார். அவர் எழுதிய விடைத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தேர்வு கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது. தேர்வு முடிந்ததும் மாணவர் அங்கிருந்து மீண்டும் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார்.