ஐபில் 2020:பஞ்சாப்க்கு எதிரான ஆட்டத்தில்கொல்கத்தா அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி

அபுதாபி,
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி தொடக்கத்தில் திரிபாதி (4 ரன்) நிதிஷ் ராணா (2 ரன்) இயான் மோர்கன் (24 ரன், 23 பந்து) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் கொல்கத்தா 3 விக்கெட்டுக்கு 63 ரன்களுடன் (10.4 ஓவர்) தவித்தது. இதனையத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்லுடன், இணைந்து அணியை சரிவில் இருந்து அழகாக மீட்டனர். கடந்த போட்டிகளில் பெரிதாக ரன்கள் குவிக்காத கேப்டன் தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார்.

இதன் பலனாக 22 பந்துகளில் அரைசதத்தை கடந்த அவர் 58 (29 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சுப்மான் கில் (57 ரன், 47 பந்து, 5 பவுண்டரி) ரஸ்செல் (5 ரன்) ஏமாற்றினார். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 165 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் லோகேஷ் ராகுலும், மயங்க் அகர்வாலும் அதிரடியான தொடக்கம் கொடுத்தனர். இதனால் பஞ்சாப் அணி 12.2 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது.

இந்நிலையில், முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் (14.2 ஓவர்) சேர்த்த நிலையில், மயங்க் அகர்வால் 56 ரன்களில் (39 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிகோலஸ் பூரனை (16 ரன்), விக்கெட் கீப்பர் சிம்ரன்சிங் (4 ரன்), விரைவில் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் லோகேஷ் ராகுல் 74 ரன்களில்,(58 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் பஞ்சாப்பின் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் வீசிய 20-வது ஓவரில், இதில் முதல் பந்தில் 2 ரன் எடுத்த மேக்ஸ்வெல், 2-வது பந்தை விட்டு, 3-வது பந்தில் பவுண்டரி விரட்டினார். 4-வது பந்தில் லெக்-பை வகையில் ஒரு ரன் கிடைத்தது. 5-வது பந்தை சந்தித்த மன்தீப்சிங் (0) அவுட்டாக கடைசி பந்தில் பஞ்சாப்பின் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது.

கடைசி பந்து சிக்சருக்கு பறந்தால் சூப்பர் ஓவருக்கு போகும் என்ற நிலைமையில் இறுதிபந்தை எதிர்கொண்ட மேக்ஸ்வெல் ஆப்-சைடில் ஓங்கி அடித்தார். துரதிர்ஷ்டவசமாக பந்து எல்லைக்கோட்டுக்கு இரண்டு இன்சுக்கு முன்பாக பிட்ச் ஆகி மயிரிழையில் அது பவுண்டரியாக மாறிப்போனது. இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்களே எடுத்தது.

இதன் மூலம் கொல்கத்தா அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது.