பிழைப்புக்கும் வழியில்லை, கடனும் நெருக்குகிறது – தற்கொலை செய்துகொண்ட 50 ஓட்டுனர்கள்!

ஊரடங்கினால் பிழைப்புக்கும் வழியில்லாமல் வாங்கிய கடனை கட்டவும் வழி தெரியாமல், நிதி நிறுவனங்கள் தந்த நெருக்கடியால் வாடகை வாகன ஓட்டுனர்கள், 50க்கும் மேற்பட்டோர், தற்கொலை செய்து உள்ளதாக, அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர், ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை, வாடகைக்கு இயக்கி சம்பாதிக்கின்றனர். இவர்களில் பலர் தனியார் நிதி நிறுவனங்கள் நீட்டும் பத்திரங்களில் கையெழுத்திட்டு, அதிக வட்டிக்கு கடன் பெற்று, வாகனங்களை வாங்கியுள்ளனர்.
கொரோனா ஊரடங்கு, இ-பாஸ் தொல்லைகள் போன்றவற்றால் இவர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் சவாரி கிடைப்பதே சிக்கலாக உள்ளது. இதனால் கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவிக்கின்றனர். கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுக்கின்றன. பல நிறுவனங்கள், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றன.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் 50-க்கும் மேற்பட்ட ஒட்டுனர்கள் தற்கொலை செய்துகொண்டதாக வாடகை வாகன ஓட்டுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பலர் வாகனங்களை விற்று கடனை அடைத்துவிட்டு அடுத்து பிழைப்புக்கு என்ன செய்வதென தெரியாமல் உள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுனர்களுக்கு, உரிய மனநல ஆலோசனையும், கடனுதவியும் அளித்து, அவர்களையும், அவர்களின் குடும்பத்தையும் காக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஓட்டுனர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.