மணமகன் மரணம்; திருமணத்தில் பங்கேற்ற 101 பேருக்கு கொரோனா

பீகார் மாநிலம் பாட்னாவின் பாலிகஞ்ச் நகரில் கடந்த மாதம் 15ம் தேதி ஒரு திருமண விழா நடைபெற்றது. திருமண விழாவில் 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆனால், திருமணம் முடிந்த மறுநாள் மணமகன் திடீரென இறந்துவிட்டார். அவரது உடலுக்கு உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்து உடனடியாக அடக்கம் செய்துவிட்டனர்.
அடுத்த சில நாட்களில், இறந்துபோன நபரின் உறவினர்கள் சிலருக்கு கொரோனா அறிகுறியுடன் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனையில் உறவினர்கள் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்தது.
பாதிப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என்பதால், அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதற்காக, ஜூன் 24 முதல் 26ம் தேதி வரை சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. திருமண விழா மற்றும் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் என சுமார் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
“திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே மணமகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. திருமண நாளன்றும் மிகவும் சோர்வுடன் காணப்பட்டுள்ளார். ஆனால், அவரது குடும்பத்தினர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், மருந்து மாத்திரைகள் கொடுத்து திருமணத்தை முடித்தனர். ” என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.