ஆசைக்கு இணங்காத பெண்.. நீச்சல் குளத்தில் தள்ளி கொலை!

சென்னை கும்மிடிப்பூண்டி அருகே ஆசைக்கு இணங்காத பெண்ணை நீச்சல் குளத்தில் தள்ளி தொழிலதிபர் கொலை செய்த சம்பவம் தெரிய வந்துள்ளது.
தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரின் மனைவி பிரியங்கா (35). கருத்து வேறுபாடால் கணவரைப் பிரிந்து திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு அருகே வாணியமல்லி கிராமத்தில் வசித்துவந்தார். சென்னை மாதவரத்தைச் சேர்ந்த காட்வின் டோமினிக் என்பவருக்கு அக்கிராமத்தில் நாய் பண்ணை உள்ளது. அங்கு வேலைப் பார்த்து வந்தார் பிரியங்கா.
இந்த நிலையில் தன்னை ஒரு மாதமாக தனது தங்கை பிரியங்கா தொடர்புகொள்ளவில்லை, என்னாலும் தொடர்புகொள்ள முடியவில்லை என அவரது அண்ணன் திருவள்ளூர் எஸ்.பி.,க்கு ஆன்லைனில் புகாரளித்தார்.
அதன்பேரில் டி.எஸ்.பி ரமேஷ் மேற்பார்வையில் போலீஸார் நாய்ப் பண்ணைக்குச் சென்று விசாரித்தனர். விசாரணையில் பிரியங்கா கொலை செய்யப்பட்ட தகவல் தெரியவந்தது.

சிறுவன் ஒருவன் கொடுத்த துப்பு மூலம் பிரியங்கா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த இடத்தை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் தோண்டினர். அப்போது அழுகிய நிலையில் பிரியங்காவின் சடலம் காணப்பட்டது. பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அனுப்பி வைத்தனர்.
இக்கொலை தொடர்பாக மெர்லின் (19) என்ற இளைஞரை பிடித்து விசாரித்தனர். நாய் பண்ணை அருகே உள்ள சொகுசு வீட்டில் விஜய் ஆனந்த் என்ற தொழிலதிபர் உள்ளார். அவருடன் பிரியங்கா நெருக்கமாக பழகி வந்தார். சம்பவத்தன்று விஜய் ஆனந்த் பிரியங்காவை தொலைபேசியில் அழைத்து வீட்டிற்கு வரவழைத்தார்.
அங்கு வந்தவரிடம் உல்லாசமாக இருக்க முயன்றார். அதற்கு பிரியங்கா மறுத்ததால், நீச்சல் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்தார். பின்னர் நானும், நாயர் என்பவரும் சேர்ந்து பிரியங்கா உடலை நாய் பண்ணை அருகே உள்ள காட்டில் புதைக்க உதவினோம். இவ்வாறு அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது விஜய் ஆனந்த், நாயர் தப்பியோடிவிட்டனர்.