பள்ளி,கல்லூரிகள் நவ.,16 முதல் இயக்கம்-தமிழக முதல்வர் அறிவிப்பு!!!

அக்டோபர் 31-ம் தேதியுடன் நிறைவடைகிற நிலையில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
இதுபற்றி தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது.
சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை சுமார் 50,000ல் இருந்து தற்போது 25,000 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்து உள்ளது.
பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், 28.10.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், தற்போதுள்ள நோய் பரவல் நிலையைக் கருத்தில் கொண்டு கரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.10.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 30.11.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.