குவைத்திலிருக்கும் 8 லட்சம் இந்திய வேலைகளுக்கு ஆபத்து!

குவைத் அரசின் புதிய வெளிநாட்டு மசோதாவால் 8 லட்சம் இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் குவைத் அரசு அறிமுகப்படுத்தியுள்ள சட்ட மசோதாவால், இந்தியர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

கொரோனா கால ஊரடங்கால் மற்ற நாடுகளைப் போன்றே வளைகுடா நாடுகளும் கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகின்றன. இதிலிருந்து மீளவும் சொந்த நாட்டினருக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யவும் குவைத் அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

இதன் காரணமாக அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களின் நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது. பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் சிறிய நாடான போதிலும் , உலக நாடுகளின் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது குவைத். இந்தியா, எகிப்து உட்பட பல உலக நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பணி நிமித்தம் குவைத்துக்குச் செல்கின்றனர்.

குவைத் நாட்டில் வாழும் 70 சதவிகிதம் பேர் வெளிநாட்டவர்கள்தான். அதில் 30 சதவிகிதத்துக்கும் மேல் இந்தியர்கள். இதை 30 சதவிகிதமாகக் குறைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக சட்டத்தையும் திருத்தியுள்ளது. இதன் மூலம் சுமார் 8 லட்சம் இந்தியர்கள் குவைத் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

“உலகின் பல நாடுகளில் வேலைசெய்யும் லட்சக்கணக்கான இந்தியர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலையில், குவைத்திலும் இத்தகைய நிலை ஏற்பட்டிருப்பது மேலும் பாதிப்பை உருவாக்கும். கச்சா எண்ணெயின் மதிப்பு அதிகரிக்கும்போது மீண்டும் இவர்களைப் பணிக்கு அழைக்க வாய்ப்புகள் அதிகம். தேவை ஏற்படும்போது திறன் வாய்ந்த ஊழியர்கள் நிச்சயம் அவர்களுக்குத் தேவைப்படுவார்கள்” என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

இந்தியர்களைப் போலவே மற்ற வெளிநாட்டினருக்கும் இந்த மசோதாவில் ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இந்தியர்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் வசிக்கும் எகிப்தியர்களின் எண்ணிக்கையை 10 சதவிகிதமாகக் குறைக்கவும் இந்தச் சட்டம் வகை செய்கிறது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x