விலை இல்லாததால் நிறுத்தப்பட்ட விறகு கரி தொழில்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார், அதனை சுற்றியுள்ள துாரி, கீழக்காஞ்சிரங்குளம், காக்கூர், ஆனைசேரி, சித்திரங்குடி, இறைச்சிகுளம் உட்பட பல்வேறு கிராமங்களில் கரிமூட்டம் தொழிலில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், வாகனபோக்குவரத்து முடங்கியுள்ளதால், போதிய விலை கிடைக்காமல் இத்தொழிலை நிறுத்தி வைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, கரிமூட்ட விவசாயிகள் கூறுகையில், “முதுகுளத்துார் பகுதியில் விவசாயத்திற்கு பிறகு மாற்றுத்தொழிலாக கருவேல் மரங்களை வெட்டி கரிமூட்டம் போடும் தொழில் செய்து வருகின்றோம். தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வெளி மாநிலங்களுக்கு வாகன வசதி தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு மேலாக பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கரி தேங்கியது. கரிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டை விட தற்போது ஒரு மூடைக்கு 100 முதல் 150 ரூபாய் வரை விலை குறைந்துள்ளதால் கரிமூட்டம் தொழிலில் செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை. எனவே கரிமூட்ட வேலை பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.