விநாயகர் சிலை படத்தை, தனது மகளின் விருப்பத்திற்காக சமூக வலைதளமான டுவிட்டரில் பகிர்ந்ததாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.
தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் சிலையின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். தி.மு.க.,விலிருந்து விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், உதயநிதியின் ட்விட், அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி அளித்துள்ள விளக்கம்:
ஒரு விஷயத்தை இங்கே நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கோ, என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், என் தாயாருக்கு அந்த நம்பிக்கை உண்டு என்பதை அனைவரும் அறிவர்.
எங்கள் வீட்டில் ஒரு பூஜை அறையும் உண்டு. அதில், எங்கள் மூதாதையர்களின் உருவப் படங்கள் உள்ளன. மேலும், என் தாயார் நம்பும் சில கடவுள் படங்களும் உண்டு. முக்கியமான முடிவெடுக்கும்போது அங்குள்ள மூதாதையர்களின் படங்கள் முன் நின்று அவர்களை மனதில் நினைத்துவிட்டுச் செய்வது எங்கள் வழக்கம். இந்நிலையில் பிள்ளையார் சதுர்த்திக்காக அம்மா ஒரு பிள்ளையார் சிலையை வாங்கியிருந்தார். அந்த சிலையை நேற்றிரவு பார்த்த என் மகள், இந்த சிலையை எப்படி செய்வார்கள் என்று கேட்டார்.
இந்த சிலை களிமண்ணில் செய்தது. தண்ணீரில் கரைக்க எடுத்துச் சென்றுவிடுவார்கள் என்றேன். இந்த சிலையை எதற்குத் தண்ணீரில் போடனும் என்று கேட்டார். அதுதான் முறை என்கிறார்கள். அடுத்த வருஷத்துக்குப் புதிதாக வேறொன்று வாங்குவார்கள் என்றேன்.
கரைப்பதற்கு முன் இந்த சிலையுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொடுங்கள் என்று கேட்டார். அவரின் விருப்பத்தின் பேரில் நான்தான் அந்த புகைப்படத்தை எடுத்தேன். மகள் ரசித்த அந்த சிலையை அவரின் விருப்பத்துக்காக என் ட்விட்டர் பக்கத்தில் பகிரந்தேன். அவ்வளவே’.
இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
