‘சின்னம்மா வந்தா என்னாகும்?’ கலக்கத்தில் அ.தி.மு.க தலைமை

சிறையில் வெளியே வந்து ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டுள்ள சகிகலாவின் வியூகத்தை சமாளிக்க, அ.தி.மு.க.வின் அதிகாரமிக்க ஐவர் குழு திடீரென கூடி ஆலோசனை நடத்தியுள்ளது.

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் ஆவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. சசிகலா வெளியான 6 மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனால் சிறைக்குள் இருந்தபடியே தேர்தல் வியூகத்தை சசிகலா வகுத்து வருவதாக சொல்கிறார்கள். அவரது வியூகத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் பணியை டிடிவி தினகரன் மேற்கொண்டு வருகிறார்.

சிறையில் இருந்து வெளியே வந்த உடன், ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை, தன் பக்கம் இழுப்பதைத்தான் முக்கியமாக திட்டமிட்டுள்ளார் சசிகலா. ஆட்சியில் இருப்பதால் தான், ஈ.பி.எஸ்.க்கு மதிப்பு. சட்டமன்ற தேர்தல் என்று வரும் போது ஓபிஎஸ் – இபிஎஸ் தலைமை காலியாகி விடும் என்பதுதான் சசிகலாவின் கணக்கு. பல நிர்வாகிகள் சென்று சசிகலாவை சந்திக்க திட்டமிட்டுள்ள விஷயத்தை, உளவுத்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதேபோல், அமைச்சர்கள் சிலரையும் தன் பக்கம் இழுக்க சசிகலா வியூகம் வகுத்துள்ளதாக கூறுகிறார்கள். அதிலும் ஓபிஎஸ் – இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ள அமைச்சர்களை தன் பக்கம் இழுப்பது எளிதாக இருக்கும் என்று சசிகலா கருதுகிறார். தற்போது அமைச்சர்களாக உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு சீக்ரெட் உண்டு. அவை, சசிகலாவிற்கு அத்துப்படி.

கடந்த காலங்களில் சசிகலா குறித்து கடுமையாக விமர்சித்து வந்த அமைச்சர்கள் கூட, சசிகலா சீக்ரெட்டுகளை வெளியிட்டு விடுவாரோ என்ற அச்சத்தில் உள்ளனர். தற்போது சசிகலா எனும் பெயரை கூறினாலே கையெடுத்து கும்பிட்டு ஓடுகின்றனர்.

அமைச்சர் உதயகுமாரிடம் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதை பற்றி கேட்ட போது எந்த பதிலும் கூறாமல் கையெடுத்து கும்பிட்டுவிட்டு சென்றார். இதே போல் சசிகலாவிற்கு எதிராக வெளிப்படையாக பேசிய கே.சி.வீரமணியும், சசிகலா பற்றி கேள்விக்கு, கையெடுத்து கும்பிட்டுவிட்டு சென்றார். இதற்கெல்லாம் காரணம் சசிகலாவிடம் இருக்கும் அமைச்சர்களின் சீக்ரெட் தான் என்கிறார்கள்.

இந்த நிலையில் தான் அமைச்சர்களிடம் கண்டிப்பு காட்டி வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன் போக்கை மாற்றி சுமூகமாகியுள்ளார் என்கிறார்கள். அதிமுகவில் அதிகாரமிக்க ஐவர் குழு நேற்று திடீரென அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடியது. கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகிய ஐவர் குழு சுமார் 4மணி நேரம் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த ஆலோசனையின் போது யார் யார் சசிகலாவை தொடர்பு கொள்ள வாய்ப்புள்ளது என்பது பற்றி தான் அதிக நேரம் ஆலோசனை நடைபெற்றுள்ளது. சசிகலாவுடன் இணைய வாய்ப்புள்ளவர்கள் என்று கருதப்படுபவர்களை முதலில் அழைத்து பேசுவது என்றும், அதற்கு பிறகும் விடாப்படியாக அதே மனநிலையில் இருந்தால் பதவியை பறிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதே போல் எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை சமாதானம் செய்வது அவர்களுக்கு புதிய பதவிகளை கொடுப்பது என்று ஒரு பட்டியல் தயாராகியுள்ளது. அதே போல் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டச் செயலாளர்களை தயாராக்குவது, ஒத்துவராத மாவட்டச் செயலாளர்களை மாற்றுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x