“தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால் பயனர் குறியீடு முடக்கப்படும்!!” – உடுமலை ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் உரிமம் பெற்ற தனியார் அதிகக் கட்டணம் வசூலித்தால் இ-சேவை மையங்களின் பயனர் குறியீடு எவ்வித முன் அறிவுப்பும் இன்றி உடனடியாக முடக்கப்படும் என, அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் நேற்று (நவ. 7) வெளியிட்ட அறிக்கை:
“தமிழ்நாடு தமிழகம் முழுவதும் 595 அரசு இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இச்சேவை மையங்கள் தலைமைச் செயலகம், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையிடம், மண்டல அலுவலகங்கள் மற்றும் சில கோட்ட அலுவலகங்களிலும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் உரிமம் பெற்ற சில தனியார் இ-சேவை மையங்கள், பொதுமக்களிடமிருந்து அரசு நிர்ணயித்த சேவைக் கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படும் நேர்வில் அந்த தனியார் இ-சேவை மையங்களின் பயனர் குறியீடு எவ்வித முன் அறிவுப்பும் இன்றி உடனடியாக முடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், இந்நிறுவனத்தின் அரசு இ-சேவை மையங்களிலும், இந்நிறுவனத்தின் உரிமம் பெற்ற தனியார் இ-சேவை மையங்களிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்வதாகப் புகார் தெரிவிக்க வேண்டுமென்றால், பொதுமக்கள் இந்நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911-க்குத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்”.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.