45% பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்; அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..

அரசு மற்றும் தனியார் பள்ளிகளை வரும் 16ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு முடிவு செய்து அறிவித்தது. இதற்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகளும், பல்வேறு கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா பரவலின் 2ம் சுற்று ஆபத்து இருப்பதால், பள்ளிகளை திறக்க கூடாது என கூறினர். இதையடுத்து தமிழகம் முழுவதும் பெற்றோர்கள், பொதுமக்களிடம் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்று பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். பள்ளிக்கு வர முடியாத பெற்றோர்கள் செல்போன் மற்றும் மின்னஞ்சல் மூலம் கருத்துகளை தெரிவித்தனர்.
‘‘வீட்டில் பிள்ளைகளின் தொல்லை தாங்கவில்லை, இதனால் பள்ளியை உடனே திறக்க வேண்டும். எப்போதும் செல்போனில் விளையாடி கொண்டிருக்கின்றனர்’’ என கூறினர். ஒரு சில பெற்றோர்கள், ‘‘தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளது. மழைக்காலம் முடிந்து மார்கழி குளிர் வர உள்ளது. அப்போது கொரோனா கிருமியின் தாக்கம் அதிகரிக்கும். இதற்கு அரசும், பள்ளி நிர்வாகமும் என்ன முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், அதை மாணவர்கள் முறையாக பின்பற்றுவார்கள் என கண்காணிக்க முடியாது. இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும், எனவே, தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் விடுமுறை முடிந்த பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும்’’ என்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 12-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். 45% பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சீருடை மற்றும் காலணிகள் தயார் நிலையில் உள்ளன. 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து நீட் தேர்வு பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் 12-ம் தேதி முதல்வருடன் ஆலோசித்த பிறகு ஆன்லைன் வகுப்பு அல்லது டி.வி மூலம் கல்வி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.