சச்சின் பைலட் மீது நடவடிக்கை எடுக்க தடை

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அதிருப்தித் தலைவர் சச்சின் பைலட் மற்றும் 18 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது வரும் 24-ம் தேதி வரை நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க, காங்கிரஸ் அதிருப்தித் தலைவரான சச்சின் பைலட், பாஜகவுடன் சேர்ந்துகொண்டு சதி செய்ததாக கூறி, துணை முதலமைச்சர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காத சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதிநீக்கம் செய்யக்கோரி, கட்சி கொறடா, சட்டப்பேரவை சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.
இது குறித்து விளக்கமளிக்க, சச்சின் பைலட் உள்ளிட்டோருக்கு சபாநாயகர் ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகரின் நோட்டீசுக்கு எதிராக ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்தில் சச்சின் பைலட் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீதான விசாரணை, வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அதுவரை, சச்சின் பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கிடையே, பா.ஜ.க.,வில் சேர 30 கோடி ரூபாய் அளிக்க, தான் முன்வந்ததாக கூறிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., கிரிராஜ் சிங்கிற்கு, தனது வழக்கறிஞர் மூலம் சச்சின் பைலட் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.