லஞ்சம் வாங்கியதாக, அரசு அதிகாரிகள் 50 பேர் பணி இடைநீக்கம்!!

லஞ்சம் வாங்கியதாக சிக்கி வழக்கு பதிவு செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் 50 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு சில அரசு அதிகாரிகளுக்கு பணம், பரிசுப் பொருட்கள் என்ற பெயரில் லஞ்சம் கொடுப்பதை சில தனியார் நிறுவனங்கள் வழக்கமாக கொண்டுள்ளன. இதுகுறித்த தகவலின்பேரில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட சில அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்துவது வழக்கம்.
அதன்படி, கடந்த அக்.1-ம்தேதி முதல் நவ.12-ம் தேதிவரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.5 கோடி, 519 பவுன் தங்க நகைகள், 6.5 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதில் அதிகபட்சமாக வேலூர் மண்டல மாசு கட்டுப்பாட்டு அதிகாரி பன்னீர்செல்வத்தின் வீட்டில் இருந்து ரூ.3.25 கோடி, 450 பவுன் நகைகள், 6.5 கிலோ வெள்ளி பொருட்கள், அவரது அலுவலகத்தில் இருந்து ரூ.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக, சேலம் மாவட்ட பதிவாளர் துறை டிஐஜி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளில் முறைகேடான வகையில் சுமார் ரூ.1 கோடி டெபாசிட் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இவ்வாறு தமிழகம் முழுவதும் 54 அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு, 64 அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், பணி இடைநீக்கம் செய்யவும் அரசுக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் பரிந்துரை கடிதம் அனுப்பினர். இதில் 50 அதிகாரிகள் மீதான முதல் தகவல்அறிக்கையும் (எஃப்ஐஆர்) அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கை பெறப்பட்டதும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.