‘கல்நெஞ்ச அரசின் மின்கட்டண கொள்ளை’ மு.க. ஸ்டாலின் சாடல்

முறையற்ற கணக்கை போட்டு கொள்ளையடிக்காமல், மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டுமென முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
100 நாட்களைத் தாண்டியும் ஊரடங்கு போடப்பட்டு, பொதுமக்களின் பொருளாதாரம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும், தமிழக அரசு மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி காட்டி, வசூலில் ஈடுபட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள மின்நிலையங்களில், பொதுமக்கள் அதிகாரிகள் இடையேயான வாக்குவாதங்கள் சகஜமாகி மாறி வருகின்றன. அந்தளவுக்கு மின்கட்ட குளறுபடிகள் தலைவிரித்தாடுகின்றன.
இதற்கிடையே, பழனிச்சாமி தலைமையிலான அரசின் மின்கட்டண குளறுபடிகளுக்கு நீதி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில், “மின்சாரச் சட்ட விதிகளின்படி தான், முந்தைய மின் கட்டணத் தொகையை அடிப்படையாகக் கொண்டு, புதிய மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது” என்று மின்வாரியமும் அலட்சியமாக பதில் தெரிவித்தது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் 18 முதல் 20 மணி நேரம் வீட்டிலேயே இருப்பதால் மின் நுகர்வு அதிகமாகி, மின் கட்டணம் உயர்ந்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: “முந்தைய மாதத்தில் செலுத்திய கட்டணத்திற்குரிய யூனிட்களை கழிக்காமல், செலுத்திய பணத்தை மட்டும் கழிப்பதால்தான் இந்தக் கட்டண உயர்வுப் பிரச்சினை. இதை மின்துறை அமைச்சர் தங்கமணியோ அல்லது பழனிசாமியோ உணராமல் இருப்பது கொரோனா ஊரடங்கை விட மிகக் கொடுமையாக இருக்கிறது.
ஊரடங்கைப் பிறப்பித்தது அரசுதான். அதனால், மக்களுக்கு வேலை இல்லை; சம்பளமும் இல்லை. பல வகையிலும் வருமானம் ஏதுமின்றி – வாழ்வாதாரத்தை இழந்து தவிப்போரிடம் அதிமுக அரசு ஏன் மனமிறங்க மறுக்கிறது. பேரிடரைக் காரணம் காட்டி டெண்டர் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் கொள்முதல் செய்ய முடிகிற அரசுக்கு, அதையே காரணம் காட்டி கட்டணத்தை ஏன் குறைக்க முடியவில்லை?
வாழ்வாதாரம் மற்றும் வருமான இழப்பை ஏன் பேரிடரின் ஓர் அங்கமாகக் கருதிட முதலமைச்சர் பழனிசாமி முன்வரவில்லை?. ஊரடங்கால் நுகர்வோர் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தி விட்டதாக ஒரு வாதத்தை அமைச்சரும், அதிமுக அரசும் மீண்டும் மீண்டும் கூறி மக்களைக் கேவலப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து மக்களும் வீட்டிற்குள் முடங்கியதற்கு அரசு பிறப்பித்த ஊரடங்குதான் காரணமே தவிர, பிழைப்புத் தேடி வெளியில் செல்லத் தயாராக இருந்த மக்கள் அல்ல.
அதிமுக அரசு மேற்கோள் காட்டும் மின்சாரச் சட்டம், 2003ன்படியே மின் நுகர்வோருக்கு கொரோனா பேரிடரை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி மின் கட்டணத்தைக் குறைக்கலாம். அதில் எவ்விதத் தடையும் இல்லை. கல்நெஞ்ச மனம்தான் முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் தடையாக இருக்கிறது. கேரள மாநில அரசு அறிவித்துள்ளது போல், 31.7.2020 வரையிலான ஊரடங்குக் காலத்திற்குக்குரிய மின்கட்டணத்தில் 70 சதவீதம் செலுத்தினால் போதும் என்று அறிவித்திட வேண்டும்.” என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.