தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க வருகிறது புதிய அதிரடி சட்டம்! டி.ஜி.பி. தகவல்!

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டு வர உள்ளதாக நீதிமன்றத்தில் டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.
சென்னை அய்னாவரத்தில் இரு ரவுடி கும்பல்களுக்கு மோதல் ஏற்பட்டது. இதில் ஜோசப் என்ற ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட வேலு என்பவர் தன்னை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தை பொருத்தவரை ரவுடிகள், அரசியல் வாதிகள் உள்ளிட்ட பெருபாலானோர் இடம் சட்ட விரோதமாக ஆயுதங்கள் இருப்பதாவும், ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவம் சமீப காலங்களாக அதிகரித்து வருவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தார்கள். மேலும் “தமிழகத்தில் ரவுடி கலாச்சாரம் அதிகரித்து வருவதாகவும் இதை கட்டுப்படுத்த என்ன..? நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழகத்தில் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் முழுமையாக ஒழிக்கும் வகையில், ஒரு புதிய சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது” என்று டிஜிபி தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், “டிஜிபி அளித்த அறிக்கைப்படி, எப்போது, சட்டம் இயற்றப்படும்? எப்போது சட்டமன்றத்தில் இச்சட்டம் குறித்து விவாதிக்க உள்ளீர்கள் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.