மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் சதீஷ் துபேலியா(66) கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார் என்ற அதிர்ச்சி செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாத்மா காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தி ஆவார். இவரது பேரன் சதீஷ் துபேலியா தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தார். அவருக்கு உமா, கீர்த்தி மேனன் என்ற இரு சகோதரிகள் உள்ளனர். தற்போது காந்தியின் கொள்ளுபேரன் சதீஷ் துபேலியா தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு காலமானார்.
சதீஷ் துபேலியாவின் இறப்பு குறித்து அவரது சகோதரி உமா துபேலியா சமூக வலைதளத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், “நிமோனியா காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எனது சகோதரர் சதீஷ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. ஒரு மாதம் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை(நவ.22) மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அவர் காலமானார்” என்று உமா துபேலியா பதிவிட்டுள்ளார்.
தவறிய சதீஷ் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஊடகங்களிலும் வீடியோகிராபர் மற்றும் புகைப்படக் கலைஞனாக கழித்தார். அனைத்து சமூகங்களுக்கும் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் புகழ்பெற்றவர் மற்றும் பல சமூக நல அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவரது நண்பர்கள் மற்றும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது இறுதி சடங்குகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
