“நீதிமன்றங்களில் நேரடியாக வழக்கு விசாரணை நடத்த வேண்டும்” – வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

நீதிமன்றங்களில் நேரடியாக வழக்கு விசாரணை நடத்தக் கோரி சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டு காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்பட்டன. பின்னா் தற்போது படிப்படியாக ஒவ்வொரு நீதிமன்றங்களும் திறக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் அனைத்து நீதிமன்றங்களும் இதுவரை திறக்கப்படவில்லை. பல வழக்குகள் காணொலி காட்சி வாயிலாக விசாரிக்கப்படுகின்றன.

மேலும் நீதிமன்ற வளாகங்களில் உள்ள வழக்குரைஞா்கள் அறைகள், வழக்குரைஞா் சங்க அலுவலகங்கள் திறக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து அகில இந்திய வழக்குரைஞா்கள் கூட்டமைப்பின் தலைவா் டி.கே.சத்யசீலன் தலைமையில் சென்னை உயா்நீதிமன்றம் வாயில் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் திறந்து நேரடியாக விசாரிக்கும் முறையை கொண்டு வர வேண்டும். காணொலி காட்சி வழியாக வழக்குகளை விசாரிக்கும் முறையைக் கைவிட வேண்டும். வழக்குரைஞா்கள் அறைகளைத் திறக்க வேண்டும் அல்லது சென்னை உயா்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்ற வளாகங்களில் உள்ள கூட்ட அரங்குகளை வழக்குரைஞா்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா். கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் வரும் நவம்பா் 2-ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனா்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x